லண்டன்:

பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தின் மரபணுவாக உள்ளது என்று, யுனெஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய தூதர் கடுமையாக சாடினார்.

பாரிசில் யுனெஸ்கோவின் 40வது பொதுமாநாடு நடைபெற்றது. இதில், இந்தியா சார்பாக இந்திய தூதர் அனன்யா அகர்வால் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது,  ஜம்மு-காஷ்மீர், மற்றும் இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த பாகிஸ்தான் பிரதிநிதியின் பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் வகையில்,  இந்தியாவின் உரிமையை யுனெஸ்கோவின் இந்திய பிரதிநிதி அனன்யா அகர்வால் விளக்கி பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் மீதான தவறான தகவல்களையும், பிரசாரங்களையும் பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த 2018-ஆம் ஆண்டின் மோசமான நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான்  14-வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டியவர், பாகிஸ்தான்  வேண்டுமென்றே விஷமனத்தனத்தை தூண்டும் விதமாக பேசிவருகிறது என்றும், பயங்கரவாதத்தின் மரபணுவாக பாகிஸ்தான் உள்ளது என்று பதிலடி கொடுத்தார்.

தனது சொந்த மண்ணில் சிறுபான்மை சமூகம் அனுபவிக்கும் மனித உரிமைகளின் மோசமான நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சமூகத்தின் முன்னால் இந்தியாவை இழிவுபடுத்துவதற்காக பாகிஸ்தான் இத்தகைய கொடூரமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தவர்.  1947-ல் சுதந்திரம் பெற்ற போது பாகிஸ்தானின் மக்கள்தொகையில் சிறுபான்மையினர் 23 சதவீதம் இருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் எண்ணிக்கை 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அனைத்து விதமான பயங்கரவாத செயல்களின் இருப்பிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்றார்.

ஐ.நா. பொது மேடையிலேயே அந்நாட்டுத் தலைவரால் (இம்ரான் கானின் சமீபத்திய ஐ.நா. உரையை குறிக்கும் விதமாக) தான் அணுசக்திப் போர் குறித்து பிதற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் ஒசாமா பின்லேடன் மற்றும் ஹக்கானி போன்ற சர்வதேச பயங்கரவாதிகளை தங்கள் நாட்டின் கதாநாயகர்கள் என பர்வீஸ் முஷாரஃப் போன்றவர்களால் தான் புகழ முடியும் என்றும் சுட்டிக்காட்டி பேசினார்.