இஸ்லாமாபாத்
இந்திய அணு ஆயுதக் கொள்கை குறித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்துக்குப் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டு அம்மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிகப்ப்ப்ட்டது. லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை அந்நாடு கோரி உள்ளது.
நேற்று முன் தினம் பொக்ரானில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் ஆண்டு நினைவு தினத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார். அதைப் பற்றி ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், “முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது இல்லை என்னும் கொள்கையில் தற்போது இந்தியா உறுதியாக உள்ளது அதே வேளையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது” எனப் பதிந்திருந்தார்.
இதற்குப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, “இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அணு ஆயுதம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய நாட்டின் பொறுப்பற்ற தன்மையையும் அதன் போர் புரியும் நோக்கத்தையும் இது வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பேச்சு மடமையைக் காட்டுகின்றது” எனக் கூறி உள்ளார்.