டெல்லி: மோசமான வானிலையில் சிக்கித் தவித்த இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் உதவி செய்து வழிநடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


உலகளவில் இன்றளவும் தீவிரவாதம், எல்லை பிரச்னை என்று இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே பிரச்னை எழுந்து கொண்டு இருக்கிறது. பாலாகோட் தாக்குதலுக்கு பிறகு, அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நடுவானில் பயணிகளுடன் நிலைதடுமாறிய இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் உதவி, வழிநடத்திய சம்பவம் தற்போது தெரிய வந்திருக்கிறது.


பாகிஸ்தானில் தற்போது கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. மின்னல் தாக்கியதில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், ஜெய்ப்பூரிலிருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட்டுக்கு இந்திய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
விமானத்தில் மொத்தம் 150 பயணிகள் இருந்தனர். பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென மோசமான வானிலையில் சிக்கியது. அதன் விளைவாக விமானம் 36,000 அடி உயரத்தில் இருந்து 34,000 அடியாக குறைந்தது.


அப்போது இந்திய விமானி ஒரு காரியம் செய்தார். மே டே எனப்படும் அவசர கால சமிக்ஞையை வெளியிட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரி, இந்திய விமானத்தை இயக்க உதவினார்.
அதன் விளைவாக, விமானம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பி இருக்கிறது. எந்த விமானத்துக்கு பாகிஸ்தான் உதவியது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.