டில்லி

பாகிஸ்தானின் விமானப்படை தலைவராக 1997-2000 வரை பணி புரிந்த பர்வேஸ் குரேஷி மெகதி என்பவர் கடந்த 1971 ஆம் வருட போரின் போது இந்திய போர்க்கைதியாக  பிடிபட்டவர் ஆவார்.

கடந்த 1971 ஆம் வருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரில் வங்க தேசம் உருவானது.   அதுவரை கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட அந்த நாடு அதன் பிறகு இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாக உருவானது.    கடந்த 1997-2000 வரை பாகிஸ்தான் விமானப்படை தலைவராக பணி புரிந்த பர்வேஸ் குரேஷி மெகதி என்பவர் அப்போது இந்தியாவில் போர்கைதியாக பிடிபட்டவர் ஆவார்.

அந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் பனாக், “கடந்த 1971 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வங்கதேச விடுதலை போர் தொடங்கியதாக கூறப்பட்டாலும்  நவம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்தே இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானை நோக்கி நகரத் தொடங்கியது.  நான் போர்ப்படை அதிகாரியாக சீக்கிய ராணுவப் பிரிவில்  பணி புரிந்து வந்தேன்.

நாங்கள் எங்கள் டாங்கி மற்றும் வீரர்களுடன் சவுகாச்சாவில் இருந்த கபடாக் நதியை கடக்க இருக்கும் போது அந்த நதிப் பாலம் எதிரிகளால் தகர்க்கப்பட்டது.   நதிக்கு அக்கரையில் இருந்த எதிரிகள் மீது தாக்குதலை தொடங்கினோம்.   எதிரிகள் பின்வாங்கவே நாங்கள் ஆற்றை கடந்து புதிய பாலம் ஒன்றை அமைத்தோம்.

ஆனால் அந்தப் பகுதியில் மீண்டும் வந்த பாகிஸ்தான் ராணுவம் எங்களை கடும் பனி மூட்டத்தின் இடையே தாக்க தொடங்கியது.    இதில் எதிரி நாட்டு ராணுவத்தினருக்கு கடும் இழப்பு  ஏற்பட்டது.  பனி விலகியதும் நவம்பர் 21 நடுப்பகலில் இருந்து 22 நண்பகல் வரை கடும்பாய போர் நிகழ்ந்தது.  நாங்கள் விமானப்படையை உதவிக்கு அனுப்புமாறு நம் நாட்டுக்கு கோரிக்கை விடுத்தோம்.   ஆனால் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மூன்று பாகிஸ்தான் விமானங்கள் எங்களை தாக்க தொடங்கின.  நாங்களும் பதிலுக்கு தாக்கினோம்.   தாக்குதலில் வீழ்ந்த விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் 2 வீரர்கள் குதித்தனர்.   அதில் ஒரு பாராசூட் டாக்கா நகரை நோக்கி பறந்து விட்டது.   மற்ற பாராசூட் எங்கள் வீரர்கள் நடுவில் விழுந்தது.   வீரர்கள் ஓடி வந்து அந்த விமானையை துப்பாக்கி கட்டை மூலம் தாக்க தொடங்கினார்கள்.

பர்வேஸ் குரேஷி மெகதி

நான் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினேன்.  அதற்குள் அவருடைய நெற்றியில் இரந்த காயம் ஏற்பட்டது.   உயரமான நல்ல உடற்கட்டுடன் இருந்த அவரை நான் எங்கள் முகாம் அலுவலகம் அழைத்துச் சென்று  அவருக்கு நமது மருத்துவர் காயத்துக்கு சிகிச்சை அளித்தார்.    அவருக்கு தேநீர் அளித்து விட்டு நான் அவரிடம் விசாரணையை தொடங்கினேன்.

அவர் பெயர் ஃபிளைட் லெஃப்டினெனெ பர்வேஸ் குரேஷி மெகதி ஆகும்.  அவர் டாக்காவை சேர்ந்த பாக் விமானப்படை வீரர் ஆவார்.  அவருடைய மனைவியின் புகைப்படம், ஒரு கைக்கடியாரம், 9மீமீ துப்பாக்கி ஒன்று, 30 புல்லட்டுகள் உள்ளிட்டவைகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.   அவர் போர்கைதியாக பிடிக்கபட்டுள்ளதாகவும் ஜெனிவா ஒப்பந்தப்படி இந்திய அரசு அவரை பத்திரமாக கவனித்துக் கொள்ளும் எனவும் நான் உறுதி கூறினேன்.

அதன் பிறகு அந்தப் பகுதியில் நடந்த போர், அதில் இந்தியா அடைந்த வெற்ரி ஆகியவை அனைத்தும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.  கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டு பாகிஸ்தான் விமானப்படை தலைவராக பணி புரிந்த பர்வேஸ் குரெஷி மெகதி என்னால் பிடிக்கப்பட்டவர் என்பதே மற்றொரு சரித்திரம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.