இஸ்லாமாபாத்:

வகுப்பு அறையை சுத்தம் செய்ய மறுத்த 14 வயது மாணவியை ஆசிரியர்கள் பள்ளி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா கோட் சகாப்தீன் என்ற பகுதியில் அரசுப் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 9ம் வகுப்பில் ஃபஜார் நூர் என்ற மாணவி பயின்று வருகிறார். இந்த பள்ளியின் வகுப்பு அறையை சுத்தம் செய்யுமாறு சீனியர் ஆசிரியர்கள் புஷ்ரா மற்றும் ரெஹனா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அப்போது அந்த மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை. வேறு ஒரு நாளில் சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள் அந்த மாணவிக்கு தண்டனை அளிக்கும் விதமாக பள்ளியின் 3வது மாடிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட்டனர்.

இதில் அந்த மாணவிக்கு முதுகு எலும்பு உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் ஷபாஸ் ஷெரீப் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கல்வி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் உண்மை அம்பலமானது. இதையடுத்து இரு ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. மாணவிக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.