ஸ்லாமாபாத்,

நவாஷ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கை கூட்டுப்புலனாய்வுக்குழு விசாரிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் உலக நாடுகள், மற்றும் முதல் உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்கள் தொடங்கவும், ரகசிய வங்கிக் கணக்குகளை தொடங்கவும் பனாமா நாட்டிலிருக்கும் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவிய விவகாரம் அந்த கம்பெனியின் ஒருகோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

இந்தக் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீபும் அவரது மகன்களும் சிக்கினர். இதையடுத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது  குடும்பத்தினருக்கு எதிராக அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி மற்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவு அடைந்தது, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,  உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில்,  நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை கூட்டு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றும், புலனாய்வு குழுவின் விசாரணைக்கு நவாஸ்  ஷெரீப் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும்  என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு இந்த வழக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போதைக்கு நவாஷின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.