வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாக் அதிபர் இம்ரான் கான் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி உள்ளார்
விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது/ ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இது குறித்து முறையிட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை. இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கியது. அதனால் அவர் நேரடியாக இந்தியாவைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்டார்.
கடந்த ஞாயிறு அன்று பாக் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான வர்த்தகங்களை முழுவதுமாக நிறுத்துவதாக அறிவித்தார். அத்துடன் இந்தியாவைப் பாசிச நாடு எனவும் இத்தியா பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கும் மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் இந்தியா அணு ஆயுத நாடு என்பதால் உலக பாதுகாப்புக்கு இந்தியாவால் அச்சுறுத்தலுள்ளாவதாகவும் உலகில் உள்ள மற்ற நாடுகளை இந்தியாவின் நடவடிக்கைகள் பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள சர்ச்சைகளைக் குறைக்கும் படியும் அமைதியை நிலை நாட்டும்படியும் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலு இவ்விரு தலைவர்களும் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான பொருளாதார உறவு, வர்த்தகம் ஆகியவை குறித்தும் பேசி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அரை மணி நேரத்தில் டிரம்ப் பாக் பிரதமர் இம்ரான் கானுடன் உரையாடி உள்ளார். அப்போது அவர், “தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள சர்ச்சைகளைக் குறைக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்துப் பேசும் போது தனது பேச்சைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அதிகமாகப் பேசக் கூடாது.” என அறிவுரை அளித்துள்ளார்.