இஸ்லாமாபாத்: தனது நெருங்கிய நட்பு நாடான சீனாவிடமிருந்து, 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனைப் பெறுகிறது பாகிஸ்தான்.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தத் தொகையானது முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக கூறும் பாகிஸ்தானின் அமைச்சரவை ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளர் நஜீப் கான், “சீன அரசிடமிருந்து 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன்தொகையைப் பெறுவதற்கான அனைத்துவித சட்டப்பூர்வ நடைமுறைகளும் நிறைவடைந்துவிட்டன.
இந்தத் தொகை, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கிக் கணக்கில், மார்ச் 25ம் தேதி, சீன அரசால் செலுத்தப்படும்” என்றார்.
பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து போனதையடுத்து, அதை ஈடுகட்டும் வகையில், ஏற்கனவே, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை நெருக்கடி கால தொகையாக வாங்கியிருக்கிறது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி