புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், தான் தொடுத்த வழக்கு தோற்றுப்போனதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 1.6 மில்லியன் அமெரிக்க டாலரை, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 2015 – 2023 வரையான காலகட்டங்களில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 6 இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெற வேண்டுமென போடப்பட்ட ஒப்பந்தத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மதித்து நடக்கவில்லை என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ‘சச்சரவு தீர்ப்பு கமிட்டி’ முன்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து, தங்களுக்கு 70 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டுமென கோரியிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் முன்வைக்கப்பட்டதென்பது ஒரு செயல்திட்டம்தானே தவிர, சட்டப்பூர்வமாக எழுதப்பட்ட ஒப்பந்தம் அல்ல’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
முடிவில், வழக்கின் தீர்ப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சாதமாக வழங்கப்பட்டு, வழக்குச் செலவினங்கள், சட்டப்பூர்வ கட்டணங்கள் மற்றும் பயணச் செலவினங்களுக்காக, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, பாகிஸ்தான் தரப்பிலிருந்து 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்ப்பளித்துவிட்டது.
– மதுரை மாயாண்டி