டில்லி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வகுப்புவாத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த 9ம் தேதி 3 நீதிபதிகள் அடங்கி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக தீபாவளி பண்டிகைக்கு டில்லியில் பட்டாசு வெடிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் இடம்பெற்ற நீதிபதி சிக்ரி கூறுகையில், ‘‘இந்த தடை உத்தரவுக்கு சிலர் மத சாயம் பூசுவது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒரு ஆன்மீக நபர் என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்’’ என்றார்.

மேலும், நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கூறுகையில், ‘‘நாங்கள் எந்த விவாதங்களுக்கு உள்ளேயும் செல்ல விரும்பவில்லை. எந்த மத நம்பிக்கையிலும் இந்த உத்தரவு ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்கள் தீபாவளி கொண்டாடுவதை நீதிமன்றம் தடுக்கவில்லை’’ என்றனர்.

இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவர் மனுவில், ‘‘தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமில்லாமல் ஜெயின், சீக்கிய மதத்தினரும் கொண்டாடுகின்றனர்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.