தலபைத்திராணி, ஒரிசா.
ஒரிசா மாநிலத்தில் உள்ள தலபைத்திராணி கிராமத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி ஒருவர் தற்போது எறும்பு முட்டைகளை தின்று உயிர் வாழும் நிலையில் உள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள கெனோஜார் மாவட்டத்தில் உள்ள தலபைத்திராணி என்னும் சிற்றூரை சேர்ந்தவர் தைதரி நாயக். தற்போது சுமார் 75 வயதாகும் இந்த விவசாயி கடந்த 2010 -13 ஆம் வருடங்களில் மலைகளுக்கு நடுவில் ஒரு கால்வாயை உருவாக்கியவர் ஆவார். ஒரு கடப்பாறை மற்றும் மண் வெட்டியின் துணை கொண்டு இவர் 3 கிமீ தூரம் உள்ள இந்த கால்வாயை வெட்டி உள்ளார். இதற்காக இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கபட்டுள்ளது.
ஆனால் இதனால் தமக்கு எவ்வித பயனும் இல்லை என நாயக் தெரிவிக்கிறார். அவர், “பத்மஸ்ரீ விருது எனக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. இதற்கு முன்பு எனக்கு தினக்கூலி வேலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது எனக்கு தினக்கூலி வேலையும் யாரும் அளிப்பதில்லை. எனக்கு தினக்கூலி வேலை அளித்தால் அது எனது கவுரவத்துக்கு இழுக்கு என பலரும் கருதுகின்றனர்.
அவ்வப்போது தையல் இலை மற்றும் மாங்காய் வற்றல் போன்றவற்றை நான் விற்பனை செய்கிறேன். அது ஓரளவுக்கு மட்டுமே எனக்கு உதவுகிறது. அதனால் நான் எறும்பு முட்டைகளை தின்று உயிர் வாழ்கிறேன். இந்த பத்மஸ்ரீ விருதினால் எவ்வித பயனும் இல்லை என்பதால் நான் இதை மீண்டும் அரசிடம் திருப்பு அளிக்க முடிவு செய்துள்ளேன்.
என்னிடம் அரசு நான் வெட்டிய கால்வாயை கான்கிரிட் கால்வாயாக மாற்றுவதாகவும் என் குடும்பத்தினருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தது. ஆனால் இதில் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. தற்போது கிராம மக்களுக்கு நல்ல நீரும் இந்த கால்வாய் வழியாக கிடைப்பதில்லை. எனக்கும் வறுமை தீரவில்லை.” என வருத்தத்துடன் கூறி உள்ளார்.
இது குறித்து ஒரிசா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்யபிரகாஷ் நாயம், “ஒரிசா அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும். நவீன் பட்நநயக் காலியா என விவசாய நலத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார். ஆனல் விவசாயத்துக்காக கால்வாய் வெட்டியவர் குறித்து அவர் அரசு கவலை கொள்ளவில்லை என்பது மிகவும் அவலமாக உள்ளது” என தெரிவித்துளார்.