புதுடெல்லி:
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்த முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், பத்ம விபூஷன் விருது ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பத்ம பூஷன் விருது மறைந்த அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.