மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள்  ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்  விவசாயிகள் நேரடி குற்றச்சாட்டு கூறினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘நெல் கொள்முதல்’ மையங்களில் ‘மாமுல்’ கேட்டு  திமுகவினர் மிரட்டுகின்றனர்,  மாமுல் கொடுக்கா விட்டால் நெல் கொள்முதல் செய்ய மறுக்றிர்கள் என்று கூறியதுடன்,  கொள்முதல் நிலையங்களை  நடத்துவதற்கு கட்சிக்காரர்களுக்கு ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்”  என்று கேள்வி எழுப்பினார்.    இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் தங்களிடம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு ஆளுங்கட்சியினர் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுத்தால்தான், நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிப்போம் என மிரட்டுவதாகவும்,  மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில்  மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராகவேந்திரன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை கோட்டப் பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் குறித்து பேசியதற்கு அதிகாரிகள் பதிலளித்த விவாதங்கள் நடந்தது.

அப்போது பேசிய சில விவசாயிகள்,  அரசு நெல் கொள்முதல் மையம் ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது.  திமுகவைச் சேர்ந்த  நிர்வாகிகள் 19 பேர் கொண்ட குழுவுக்கு மாமூல் கொடுத்தால்தான் கொள்முதல் செய்கின்றனர். எனது நெல் மூட்டைகளை 5 நாட்கள் எடை போடாமல் நிறுத்திவிட்டனர். பின்னர் மாமூல் கொடுத்த பின்புதான் எடை போட்டனர். இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும்” என செல்லம்பட்டி விவசாயி கண்ணீர் மல்கக் கூறினார். இதை கேட்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

அதுபோல மற்றொரு விவசாயி,  “அரசு நெல் கொள்முதல் மையம் அமைப்பதில் அரசியல் கட்சியினரின் தலையிடுகள் உள்ளது.  ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக இருக்கிறது. அங்கு பல முறைகேடுகள் நடக்கிறது” என்றார். ஹ

அதற்கு  பதில் கூறிய ஆட்சியர்,   “அரசு நெல் கொள்முதல் மையத்தை யாருக்கும் குத்தகைக்கு விடவில்லை. அரசாங்கம்தான் நடத்துகிறது. யார் தலையீடு செய்தாலும் தைரியமாக என்னிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளியுங்கள்” என்றார்.

இதையடுத்து பேசிய பாண்டியம்மாள் என்ற விவசாயி, நாங்கள்  வயலில் கஷ்டப்பட்டு உழுது அறுவடை செய்கிறோம். விளைவிக்கும்  பயிரை விற்பனை செய்ய கடைசியில் மையத்தை நாடினால்,   அங்கு அதை கொள்முதல்வதற்கு கட்சிக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. நீங்கள் ஏன் கொள்முதல் நிலையங்களை  நடத்துவதற்கு கட்சிக்காரர்களுக்கு ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்”  என்று கேள்வி எழுப்பினார்.

நாட்டாபட்டி பகுதியைச் சேர்ந்த  விவசாயி  ஒருவர் கூறும்போது,  “செல்லம்பட்டி ஒன்றியத்தில் நாட்டாபட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையத்தில் திமுகவினர் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்களது பெயர்களை சொல்ல விரும்பவில்லை.  அவர்கள்  எங்களுக்கு கப்பம் கட்டாமல் நெல்லை விற்க முடியாது” என மிரட்டுகின்றனர் என்று கூறியதுடன், இதுதொடர்பாக எங்களுக்கு இடையே தகராறு மூண்டதாகவும், என்னிடம் அவர்கள்  தகாத வார்த்தைகளால்  சண்டையிட்டனர். பின்பு ஒரு மூட்டைக்கு ரூ.70 வீதம் 600 மூட்டைக்கும் கப்பம் கட்டிய பிறகுதான் எடை போட்டனர் என்று கண்ணீர் மல்க கூறியதுடன்,   அவர்களது தொல்லை தாங்கமுடியவில்லை.

எனவே ஆஸ்டின்பட்டியிலுள்ள நிரந்தர நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விவசாயிகள் எந்நேரமும் விற்பனை செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

அதற்கு ஆட்சியர், “நீங்கள் உடனடியாக என்னிடம் புகார் அளித்திருக்கலாமே” என்றார்.

அதற்கு பதில் கூறிய  விவசாயிகள், “ நெல் கொள்முதல் நிலையங்கள் முழுக்க, முழுக்க ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களாலும் தடுக்க முடியாது,” என்றனர்.

இதற்கு பதில் கூறிய ஆட்சியர் சங்கீதா, , “இப்போது எங்கெங்கு முறைகேடுகள் நடக்கிறது என எழுத்துப்பூர்வமாக புகார் தாருங்கள். எந்த ஒன்றியச் செயலாளர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது மற்ற விவசாயிகளும் ஒட்டுமொத்த குரலில்  ‘எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஆளும்கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது’ என்றனர்.

இதையடுத்து மாங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசும்போது,   “மாவட்டம் முழுவதும் பருவகால மாற்றத்தால் நெல் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 2-லிருந்து 4 மூட்டைகள்தான் கிடைத்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததாக போலி கணக்கு காட்டி அரசை அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர்” என்றார்.

பின்னர் பேசிய ஆட்சியர் சங்கீதா,  “மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டதில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தை அனுமதிக்கக் கூடாது என கருத்துகளை தெரிவித்தனர். இதனை அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

விவசாயிகள் விஷயத்திலாவது ஆட்சியர் சங்கீதா நடவடிக்கை எடுப்பாரா?  என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், ஆடுகோழி வெட்டுவோம் என  சர்ச்சையை ஏற்படுத்தியபோது நடவடிக்கை எடுக்காமல், பின்னர் அது பூதாகார மானதாக மாறிய பிறகு, நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது போல இல்லாமல், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பிரச்சினையில், ஆளும் கட்சியினரின் தலையீட்டை தடுப்பாரா அல்லது எப்போதும்போல கண்டுகொள்ளாமலே இருப்பரா என்பது  மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

இருந்தாலும் விவசாயிகளின் குமுறலுக்கு ஆட்சியர் சங்கீதா செவி சாய்ப்பார் என்றும், நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.