பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது.
மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சுக் குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
கோயிலின் தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.
ஆறடி உயரமுள்ள இந்த அம்மனைத் தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.
இத்தலத்திற்கு சென்றால் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேசுவரர், மகாலட்சுமி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் தரிசித்து வரலாம்.
திருவிழா – நவராத்திரி விழா நடைபெறுகிறது. நவராத்திரி காலத்தில் துர்கா, லட்சுமி, சரசுதியை வழிபட்டால் நமக்கு வீரம், செல்வம், கல்வி ஆகியன கிடைக்கும்.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதியம் 12 மணிக்கு பாலாபிசேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அத்துடன் மாலையில் குங்குமத்தால் சிறப்பாக அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தை பார்ப்பதற்காகவே பக்தர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.
சரசுவதி கல்விக்கு அதிபதி. அதேபோல் பேச்சுக்கு அதிபதி தான் பேச்சியம்மன்.
பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். வழிபட்டுப் பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
ராகு கேது தோடம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு அபிசேகம், அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
அம்மனுக்கு பாலாபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.