சென்னை: இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி, அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் திமுக கூட்டணி கட்சியான ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார். இவர் திமுக சாரபில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆதரவாளர்களை தமிழ்நாட்டில், திமுக, விசிக, திக உள்பட கூட்டணி கட்சிகள் கடுமையாக சாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளால் தரம் தாழ்ந்தும் விமர்சிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், இதை கட்சி தலைவர்கள் ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், ஆளும்கட்சி மீதோ, ஆட்சியாளர்கள்மீதோ யாராவது குற்றம் சுமத்தினால், அவர்கள்மீது வழக்குகள் பாய்கிறது.
சமீபத்தில் மோடிக்கு ஆதரவாக பேசிய இளையராஜா, பாக்யராஜ் போன்றவர்களை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த ஒரு வாரமாக கார்னர் செய்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவரும், திமுக சின்னத்தில் வெற்றி பெற்றவருமான தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து, மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார் என்றும், அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் எனவும் டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்துஉள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பச்சமுத்து, நாட்டின் மீது பற்று கொண்டவர்களாக காந்தி உள்பட பலர் திகழ்ந்தனர், இப்போது பிரதமர் மோடி அவ்வாறு திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவை உலக நாடுகள் தலைநிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துவரும் பெருமகன் அவர் என்று புகழாரம் சூட்டியதுடன், சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி எதிரி அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
சொல்லப்போனால், தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரிபோல கட்டமைத்து வருகின்றனர். அந்த கட்டமைப்பு நீண்ட காலம் நிலைக்காது. இதே தமிழகம் பிரதமர் மோடியை நேசிக்கும், பாராட்டும் காலம் வரும் என்று நம்புவதாகவும் கூறினார்.
பாரிவேந்தர் பச்சமுத்துவின் கருத்துக்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்கிறதா? தூற்றுகிறதா? என்பது விரைவில் தெரியவரும். பிரதமர் மோடி ஆதரவாளர்களை திமுக அதன் தோழமை கட்சிகள் கடுமையாக வசைபாடுவது உண்மை என்றால், பாரிவேந்தரையும் அவர்கள் தூற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.