டில்லி

பொருளாதாரம் குறித்து அறிவிக்காமல் தீபம் ஏற்றச் சொன்ன பிரதமர் மோடிக்கு முன்னாள்  அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.  இதனால் அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடபட்டுள்ளன.   இதனால் பல லட்சக கணக்கானோர் பணிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் அரசைக் கேட்டுக்  கொண்டார்.   கடந்த வாரம் நிதி அமைச்சர் சுமார் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளைப் பொதுமக்களுக்கு அறிவித்தார்.  இது போதுமானதாக இல்லை என்பதால் இரண்டாம் கட்ட உதவிய அளிக்க ப சிதம்பரம் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார்.   அப்போது நிதி உதவி குறித்த அறிவிப்பு வரலாம் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.   மோடி வரும் 5 ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை 9 நிமிடம் அணைத்து வைத்து 9 நிமிடங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்ற வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில்,

“அன்புள்ள பிரமதர் மோடி. நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டு வரும் 5-ம் தேதி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். நீங்கள் அதற்குப் பதிலாக எங்கள் பேச்சையும், பொருளாதார வல்லுநர்கள், தொற்றுநோய் வல்லுநர்களின் நல்ல அறிவுரையையும் கவனமாகக் கேளுங்கள்.

சென்ற மாதம்  25-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிதித்தொகுப்பில் ஏழைகளையும், தொழிலாளர்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு நிதித்தொகுப்பை அறிவித்தார். ஆகவே, இன்றைய உங்கள் உரையில் ஏழைகள் வாழ்வாதாரத்துக்குத் தாராளமாக ஆதரவு அளிக்கும் 2-வது நிதித்தொகுப்பை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்.

நாட்டில் உள்ள வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், வர்த்தகம் செய்வோர் முதல் கூலித்தொழிலாளி வரை, பொருளாாரச் சரிவைத் தடுத்து நிறுத்தும் வகையில் அறிவிப்புகளை அறிவிப்பீர்கள். பொருளாதார வளர்ச்சி இயந்திரத்தை மீண்டும் இயக்கிவிடுவீர்கள் என எதிர்பார்த்தார்கள்.

அதற்கு மாறாக அமைந்த உங்கள் இரு உரையிலும் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  தாங்கள் சொல்லும் விளக்கேற்றும் குறியீடு முறை என்பது முக்கியம்தான். என்றாலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீவிரமான சிந்தனைகளும், நடவடிக்கைகளும் சமமான முக்கியம் உள்ளதாகும்.”

என பதிவிட்டுள்ளார்.