டெல்லி
மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் பண வீக்க பாதிப்பு பற்றி நிதி அமைச்சருக்கு தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.
எனவே பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட்மீதான விவாதத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்,
’நாட்டில் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு சென்றால்தான் பணவீக்கத்தின் பாதிப்பை அறியமுடியும். பணவீக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை.
பணவீக்கத்தின் பாதிப்பு தெரியாததால்தான் 10 வார்த்தைகளில் நிதி அமைச்சர் பேசிவிட்டு சென்றார். விலைவாசி உயர்வு மக்களை அதிகம் பாதிக்கிறது. வட்டி விகிதங்கள் ஏன் இன்னும் அதிகமாக உள்ளன?.
மேலும் பட்ஜெட் உரையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஏன் விரிவாக நிதி அமைச்சர் பேசவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை.”
என்று கூறியுள்ளார்.