சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மக்களிடம் சோதனை மேற்கொள்ளும் வகையில் சென்னை வந்தடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 10ந்தேதி சோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்தியாவில், மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது. இதையடுத்து, சீரம் நிறுவனத்திற்கு மனிதர்களிடம் 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதனப்டி, கோவிஷீல்டு தடுப்பூசி, இந்தியாவில் உள்ள 17 நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சோதனை தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனைக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின் சமூக மருத்துவ துறை மருத்துவர்கள் இதற்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மருத்துவமனையில் 100 முதல் 120 பேர் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு தேவையான 300 தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதையடுத்து வரும் 10ம் தேதி, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 மற்றும் 24 வது நாட்கள் இவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சோதனை நடத்தப்படும். சோதனைக்கான தன்னார்வளர்கள் தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.