லண்டன்:

ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் ஓவியம் அகற்றப்பட்டது.

மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குட்பட்ட இக்கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார்.

இதை தொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு முதல் அந்த கல்லூரியில் அவரது உருவப்பட ஓவியம் இடம்பிடித்தது. நோபல் பரிசு பெற்ற இவரை கடந்த 2012-ம் ஆண்டில் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரி தனது கல்லூரிக்கு அழைத்து கவுரவித்தது.

இந்நிலையில் கல்லூரி நுழைவு வாயிலில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் ஓவியத்தை பல்கலை க்கழக நிர்வாகம் அகற்றியுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘கண்காட்சியில் வைப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் புதிய ஓவியங்கள் கிடைத்துள்ளன. எனவே ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

ஆனால் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூ கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.