லக்னோ:
உ.பி. மாநிலம் மிரட் சவுத்தரி சரன் சிங் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மாற்றி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் 3 பேர், இதற்கு மூளையாக செயல்பட்ட கவிராஜ் சிங், ஒரு ஊழியர், 2 ஒப்பந்த ஊழியர் ஆகியோரை எஸ்டிஃஎப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பல்கலைக்கழக முன்னாள் ஊழியர் சி.பி.சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளராக இருப்பவர் பவன்குமார். இவரும், ஒப்பந்த தொழிலாளர்களான கபில்குமார், சந்தீப் ஆகியோர் சேர்ந்து விடைத்தாள்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மருத்துவ மாணவர்களிடம் ரூ. 1 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும், இதர தொழில் பிரிவு மாணவர்களிடம் ரூ. 40 ஆயிரம் வரையிலும் பணம் பெற்றுக் கொண்டு இந்த மோசடியில் ஈ டுபட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தள்ளது.
இந்த மோசடி மூலம் தகுதியற்ற 600 பேர் டாக்டர்களாக பட்டம் பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு மோசடியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடிக்கு போதுமான ஆவண ஆதாரங்கள் இல்லை. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது கடினமாக இலக்கு என்று ஐஜி அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
துணைவேந்தர் நரேந்திரகுமார் கூறுகையில், ‘‘பவன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2 ஒப்பந்த தொழிலாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சட்ட முகமைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும்’’ என்றார்.
முதலில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெற்று விடைத்தாள்களை சேகரித்து வந்துள்ளனர். பின்னர் அதில் வினாக்களுக்கான சரியான விடையை எழுதி தேர்வு விடைத் தாள் மையத்தில் ஏற்கனவே உள்ள அசல் விடைத்தாள்களை அகற்றிவிட்டு, புதிய விடைத்தாளை வைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 350 அரசு, அரசு உதவிப் பெறும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.