அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
மேலும் நாட்டின் நீதி அமைப்பில் உள்ள சில உள்ளார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

1956 மே 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அமலாக்கத்துறை தனது 69 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நவீன் இவ்வாறு பேசினார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மொத்தம் 1,739 வழக்குகள் விசாரணையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
அமலாக்கத்துறை விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பமும் தடயவியல் அறிவியலும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 93.6% என்று குறிப்பிட்டார்.