பிஜ்னோர்: உத்திரப் பிரதேசத்தில், முசாஃபர்நகர், மதுரா மற்றும் பக்பாட் ஆகிய இடங்களை அடுத்து, பிஜ்னோரிலும், ‘மகாபஞ்சாயத்’ பிரமாண்டமான விவசாயிகளின் மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த பிரமாண்ட மாநாட்டில், 15000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கர்நாடகம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயத் தலைவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதீய கிசான் யூனியன் என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் கெளரவ் திக்கெய்ட் கூறியுள்ளதாவது, “விவசாயத்திற்கு எதிரான வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில், இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் இன்னுயிரை ஈந்துள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மரணங்கள் தொடர்பாக ஒரு இரங்கல் வார்த்தையைக்கூட உதிர்க்கவில்லை.
விவசாயிகளின் துயரங்கள் குறித்து கேட்பதற்கு அவரின் காதுகள் தயாராக இல்லை. இந்த அரசு அகந்தையில் உள்ளது. எனவே, விவசாயிகள் இந்தப் போராட்டத்திற்காக ஒன்று திரள வேண்டும்.
நம்மை காலிஸ்தானிகள் என்று முத்திரைக் குத்தி இழிவுப்படுத்தப் பார்க்கிறது இந்த அரசு. ஆனால், நாம் காலிஸ்தானிகளும் இல்லை, பாகிஸ்தானிகளும் இல்லை. இந்திய விவசாயிகளான நாங்கள், எங்களை நசுக்கும் சட்டங்களை எதிர்த்துப் போராடுகிறோம்” என்று பேசியுள்ளார்.