சென்னை: ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தன. இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்துள்ளார்.

இதன்மூலம், 37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.  அதைத்தொடர்ந்து நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரிலான விழிப்புணர்வு வாகனத்தையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.