கராச்சி: பாகிஸ்தான் வீரர்கள் சோர்வடைந்த உடல் மற்றும் மனதுடன் நீயூசிலாந்தில் விளையாடி வருகிறார்கள் என்றுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்.

நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், தங்கள் அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள மிஸ்பா உல் ஹக், “பாகிஸ்தான் வீரர்கள், சோர்வடைந்த மனம் மற்றும் உடலுடன் நியூசிலாந்தில் விளையாடுகிறார்கள். தனிமைப்படுத்தல் நடைமுறை முடிந்து, அவர்கள் ஆட்டத்திற்கு தயாராவதற்கு மிகக் குறைந்த அவகாசமே இருந்தது.

டி-20 போட்டியைப் பொறுத்தவரை, நாங்கள் சில தவறுகளை திருத்திக் கொண்டிருந்தால், அத்தொடரையே வென்றிருப்போம். ஆனால், இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் நாங்கள் நிறைய நேர்மறை விஷயங்களை கற்றுக் கொண்டோம்.

பாபர் ஆஸம், இமாம் உல் ஹக் மற்றும் சதாப் கான் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள், அணியை பெரியளவில் பலவீனமடையச் செய்துள்ளது. ஆனாலும், அணி தீவிரமாக போராடுகிறது” என்றுள்ளார் அவர்.