புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரானது, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கு உதாரணமாக கொள்ளப்படும் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு பேசினார் மோடி. சீனாவுடன் மோசமான உறவு நிலவும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து சிதைப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் நிலையில், இந்த இக்கட்டான நேரத்திலும் மாநிலங்களின் அதிகாரங்கள் மீது கைவைக்கும் நிலையில், மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “ஊரடங்கு தளர்வுகள் மூலமாக, நாம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளோம். முறையான வழிகாட்டு நெறிமுறைகளை நாம் பின்பற்றினால், இந்தப் போரை குறைந்தளவு சேதாரத்துடன் வெல்வோம். இந்தியா நடத்திய கொரோனாவுக்கு எதிரான போர் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கப்பட்டால், ‘கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்திற்கான உதாரணமாக அது கொள்ளப்படும்.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை, 3 கட்டங்களாக படிப்படியாக திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதுடன், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்டுகள், வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை திறந்துவிடப்பட்டுள்ளன.
அதேசமயம், மெட்ரோ சேவைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், தனியார் வாகனங்கள் போன்ற சேவைகள் புதிய விதிமுறை கட்டுப்பாடுகளுடன் தற்போது மக்களுக்கு கிடைக்கின்றன. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை நீடிக்கிறது.
நமது மக்கள்தொகை மிக அதிகமானது என்றாலும், நாம் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். நமது குணமாகும் விகிதம் 50% என்ற அளவில் உள்ளது. இது உலகளவில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் திரும்பியுள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் அளவு அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களின் விற்பனையளவு தற்போது 70% என்ற அளவில் உள்ளது. இது ஊரடங்கிற்கு முந்தைய நிலை” என்று பேசினார்.