டில்லி
சந்திரயான் 2 மூலம் இந்தியாவின் நிலவுப் பயண எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் தரை இறங்க வேண்டிய விக்ரம் லாண்டர் திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் இது நடந்துள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கடைசி நிமிட தடங்கலை பலரால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பிரதமர் மோடி, “சந்திரயான் 2 விண்கலப் பயணம் எதிர்பார்த்தபடி மிகவும் சரியாக அமைந்தது. கடைசி நிமிட தடங்கலைக் குறித்து விஞ்ஞானிகள் வருந்த வேண்டாம் . நான் என்றும் உங்களுடன் இருப்பேன். அனைத்து இந்தியர்களும் உங்களுடன் உள்ளனர். இந்தியாவின் இந்த சாதனை இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பால் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இது போலத் தடங்கல்கள் ஏற்படும் போது தான் எதிர்காலத்தில் அவைகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து நாம் செயல்பட முடியும். இன்னும் நாம் நிறையச் சாதிப்போம் என்னும் நம்பிக்கை நம் அனைவருக்கும் உள்ளது. இப்போது இருட்டி விட்டது என்றால் நாளைக் காலை வெளிச்சத்துடன் விடியும் என்பதே பொருள் ஆகும். இந்த சந்திரயான் 2 மூலம் நிலவைத் தொடும் நமது எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.