டெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு  ஆஸ்கார் விருது பெற்ற மூத்த ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

டெல்லி எல்லையில் 74வது நாளாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க துணை அதிபர் கமலாஹாரிஸ் உறவினர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.  அதைத்தொடர்ந்து,  அமெரிக்காவின் பிரபல பாடகி ரிஹானா, சுவீடனின் இளம் சூற்றுச்சூழல் ஆர்வலதான கிரேட்டா தன்பெர்க் உள்பட ஏராளமான பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூத்த ஹாலிவுட் நடிகையான சூசன் சரண்டன் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.  சூசன் சரண்டன் ஸ்பீட் ரேசர், தி மெடலர், ஏ பேட் மாம்ஸ் கிறிஸ்துமஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது 74 வயதாகும்  சூசன் சரண்டன் ஆஸ்கார் விருது பெற்றவர். இவர்  தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை பதிவிட்டு, இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஒற்றுமையுடன் நிற்பதாகவும் மேலும் அதுகுறித்த செய்தியை வாசிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  “வெளிநாட்டுப் பிரபலங்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு உண்மை அறிந்து பேச வேண்டும். மேலும் அவர்கள் பேசுவது ஆதாரமற்றது மட்டுமில்லாமல் பொறுப்பற்றதாகும் என்று விமர்சித்துள்ளார்.