புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கானது என்று கேள்வியெழுப்பியுள்ளனர் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்தவர்கள்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த 2021ம் ஆண்டிற்காக தாக்கல் செய்த பட்ஜெட், சாதாரண மக்கள் திரளிடம் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. முற்றிலும் முதலாளிகளுக்கான பட்ஜெட் என்றும், நாட்டையே விற்பனை செய்யும் பட்ஜெட் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பட்ஜெட் குறித்த, டிரேட் யூனியன் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதை கொடூரமான உணர்வற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் அடித்தட்டு மக்களின் துயர் துடைப்பதற்கான எந்த அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் குறித்து, மோடி அரசின் தரப்பில், பெரிதாக ஊதிப் பெருக்கப்பட்டாலும், சாதாரண மக்களுக்கான சாதகங்கள் என்று அதில் எதுவுமில்லை. வேலைவாய்ப்பின்மை, கொரோனா தாக்கம் உள்ளிட்டவற்றால், மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான, நேரடி பயன்கள் எதுவுமே அதில் இல்லை என்று அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பணிவாய்ப்புகளைப் பெருக்குதல் மற்றும் பணித்திறனை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து, இந்த பட்ஜெட்டில் மறைமுகமாக கேலி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.