மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அலிபாக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக மும்பை நகரின் அந்தேரி, வைல் பார்லே, சாண்டாகுரூஸ், கர் மற்றும் பாந்த்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. BKC, குர்லா, செம்பூர் மற்றும் காட்கோபரில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பை மற்றும் தானேவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இதனால் இந்த பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

அடுத்த 3-4 மணி நேரத்தில் மும்பை மற்றும் தானேயில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் இடி/மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக அலிபாக் மற்றும் மும்பை-புனே பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. புனேவில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மும்பையில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான சேவைகளை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் ஆகிய விமான நிறுவனங்கள், மும்பையில் (BOM) நிலவும் மோசமான வானிலை (கனமழை) காரணமாக, அனைத்து புறப்பாடுகள்/வருகைகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் விமானங்கள் பாதிக்கப்படலாம் என்று பயணிகளை எச்சரித்துள்ளது.

மேலும், பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்திற்குள் 115.6 மிமீக்கு மேல் மற்றும் 204.4 மிமீ வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அடுத்த நான்கு நாட்களில் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் பல/சில இடங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.