சென்னை: ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.


அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,  மாநிலம் முழுவதும் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், , ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது, எப்போதும் கவுரவர்கள் வென்றதாக சரித்திரமில்லை; அவர்கள் எவ்வுளவுதான் சூழ்ச்சி செய்தாலும் இறுதி வெற்றி பாண்டவர் களுக்குத்தான் என்பதை தீர்ப்பு நிரூபித்து உள்ளது.

இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கு கிடைத்த தீர்ப்பு. இனிமேல் ஓபிஎஸ்க்கு அரசியல் எதிர்காலம் இல்லை, அவருடைய அரசியல் எதிர்காலம் ஜீரோதான் என கடுமையாக விமர்சித்தவர்,  ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் கட்சிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பார் என கூறினார்.

மேலும், உச்சநீதி மன்றத்தீர்ப்பை சட்டமன்றமும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சி தற்போது உள்ளது. தலைமைக்கழகத்திற்கு அடியாட்களுடன் வந்து இதயதெய்வம் மாளிகையை எட்டி உதைத்ததையும், கருணாநிதியை புகழ்வதையும், பலவகைகளில் திமுகவின் ‘பி டீம்’மாக இருப்பவரை தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான்.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி இல்லாத அதிமுகதான் இனி நூற்றாண்டு காலம் தழைக்கும் என்றவர்,  ஓபிஎஸ் தர்மயுத்தத்தை சசிகலா குடும்பத்தை எதிர்த்து தொடங்கினார், ஆனால் விசாரணை கமிஷனில் அம்மா மரணத்தில் சந்தேகமில்லை என கூறினார். சசிகலாவை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என கூறியதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

கருத்து என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், திமுக சார்ந்து இல்லாமல் இருந்தால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸை ஆதரிக்கும் கொஞ்சம்பேரும் எடப்பாடியார் தலைமையை விரைவில் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு சம்மடி அடியாக விழுந்துள்ளது என்றவர், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.

அதுபோல செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தீர்ப்பு மூலம் தங்களது அணிதான் அதிமுக என்பது உறுதியாகி உள்ளது, இனி ஓபிஎஸ் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான்” என கூறினார்.