சென்னை: புழல் சிறையில் இன்று காலை ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு ஜெயக்குமாரின் பட்டினம்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் நேற்று வழங்கியது. அதன்படி, திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து  விடுதலை செய்யப்பட்டார். அதிமுகவினர், பட்டாசு வெடித்து, ஆரவாரமாக அவரை அழைத்து வந்தனர்.

இந்த நிலையில்  பட்டினம் பாக்கம் வீட்டுக்கு வந்துள்ள அவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.