சென்னை: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை எடப்பாடி தரப்பு உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஏற்க மன்ற உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதனால், ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ், சில ஆதரவாளர்களைக்கொண்டு தனி அணியாக அரசியல் செய்து வருகிறார். அதிமுக தொடர்பாக அவர் தொடர்ந்த பல வழக்குகள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித் விட்டன, இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பு, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை உபயோகப்படுத்தி வந்தது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஒபிஎஸ் உபயோகப்படுத்தக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை எடப்பாடி தரப்பு பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ் மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அவரது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாகவும், 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வாக்கு இன்று நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 10-ந்தேதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக விவகாரத்தில் நீதிமன்றத்தின் தொடர் தீர்ப்புகள் ஓபிஎஸ்க்கு எதிராகவே அமைந்துள்ளதால், ஓபிஎஸ் மேலும் பின்னடவை சந்தித்து உள்ளார். அவரது அணிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கிய பாஜக தலைமை, ஓபிஎஸ்.ஐ தொடர்ந்து ஆதரிக்குமா விரட்டியடிக்குமா என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரிய வரும்.