டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடங்கிய நிலையில், இன்று காலை நடைபெற்று வரும் மாநிலங்களவை கூட்டத்தொடரில், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் கூடுகிறது. அதன்படி இன்று காலை மாநிலங்களவை தொடங்கியது.
அப்போது எதிர்க்கட்சிகள் விவசாய மசோதாக்கள், விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சபையில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, வேளாண் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக கூறுவது தவறு என்றும், 4 மணி நேரம் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றதாகவும், வேளாண் சட்டங்கள் பகுதி பகுதியாக ஆய்வுசெய்யப்பட்ட பிறகே, நிறைவேற்றப்பட்டது என்றும் கூறினார்.
இதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து சபையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபை காலை 10,30 மணி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.