டெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா – சீனா மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணே எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டிருந்ததை மேற்கோள் காட்ட முயன்றார். இதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்க, ராகுல் காந்தி பேசுவதற்கு ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.
இதனை கண்டித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிப்ரவரி 4ந்தேதி மாலை பிரதமர் அளிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், உரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
மக்களவைக்கு உரையாற்ற வரும்போது, பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததால், அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை தான் அறிவுறுத்தியதாக ஓம் பிர்லா அவையில் விளக்கம் அளித்திருந்தார். அப்போது தமிழக பெண் எம்.பி.க்கள் சிலரும் இந்த அவலமான நடவடிக்கைக்கு துணைபோதும் தெரிய வந்தது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டு, இன்று (பிப்ரவரி 9ந்தேதி) மீண்டும் கூறியது. அவை கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான கார்கே அறையில் ராகுல்காந்தி உள்பட இண்டி கூட்டணி நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக உள்பட பல கட்சிகளைச்சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். பின்னர், அவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துடன் அவையை ஒத்தி வைத்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகர வாயிலில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அந்த ஒப்பந்தத்தை “பொறி ஒப்பந்தம்” என்று அழைக்கும் பதாகையை ஏந்தியிருந்தனர். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவும் அவர்களுடன் இணைந்து, மத்திய அரசைக் கண்டித்து, “எது சரியென்று நினைக்கிறீர்களோ அதையே செய்யுங்கள்” மற்றும் “சர்வாதிகாரம் நடக்காது” போன்ற முழக்கங்களை எழுப்பினார்.
முன்னதாக இன்று, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து விவாதம் கோரி லோக் சபாவில் ஒத்திவைப்புத் தீர்மான அறிவிப்பைக் கொண்டுவந்தார். அந்த அறிவிப்பைச் சமர்ப்பித்தபோது, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில விவசாயப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படுவது குறித்து திமுக எம்.பி. கவலை தெரிவித்தார்.
இதற்கிடையில், ராஜ்ய சபாவில், பாஜக எம்.பி. சதீஷ் சந்திர துபே, என்.எல்.சி இந்தியா லிமிடெட்டின் செயல்பாட்டு செயல்திறன் குறித்த இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையின் நகலை அவையில் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]