டெல்லி: ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக தகவல் தெரிவித்ததாக வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் ஆப்பிள் செல்போன் உபயோகப்படுத்தும் இந்திய எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தங்களது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே பெகாசஸ் விவரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, இது கிரிமினல்கள் மற்றும் திருடர்களின் வேலை என்று கடுமையாக எச்சரித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை த அறிவிப்பு வந்தவர்களும், ஆப்பிள் நிறுவனமும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து சில எம்.பி.க்கள் மற்றும் சிலரிடமிருந்து நாங்கள் ஊடகங்களில் பார்த்த அறிக்கைகளால் நாங்கள் கவலைப்படுகிறோம்.
ஊடக அறிக்கைகளின்படி அவர்கள் பெற்ற அறிவிப்பில், அவர்களின் சாதனங்களில் ‘அரசு ஆதரவு தாக்குதல்கள்’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினையில் ஆப்பிளின் பெரும்பாலான தகவல்கள் தெளிவற்றதாகவும் குறிப்பிட்ட தன்மையற்றதாகவும் தெரிகிறது.
இந்த அறிவிப்புகள் முழுமையற்ற தகவலின் அடிப்படையில் இருக்கலாம் என்று ஆப்பிள் கூறுகிறது. எனவே சில அறிவிப்புகள் பொய்யாக இருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா உலகளவில் முன்னேறி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களின் ஒரே வேலை அரசாங்கத்தை விமர்சிப்பது மட்டுமே.” என்று கூறினார்.
இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், எந்த ஒரு அரசையும் குறிப்பிட்டு நாங்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும், “அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்புள்ளது.
அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்கள் அதிக நிதியுதவியுடனும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் வைத்திருப்பார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் சம்பந்தமான தகவல்களை எங்களால் வெளியிட முடியவில்லை. காரணம் எதிர்காலத்தில் அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களின் நடத்தையை மாற்றியமைக்க இது உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.