டெல்லி: நாடாளுமன்றத்தில்  சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில்  தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய – சீனப்படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது. மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விவாதிக்க முடியாது என மத்தியஅரசு  கறாராக உள்ளது.

இந்த நிலையில்,  சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து, காந்தி சிலை முன் காலை 10:15 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று காலை சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, ப.சிதம்பரம், வேணுகோபால், அ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் திமுக உள்பட 14 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.