டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) நள்ளிரவு 1 – 1.30 வரையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்திருந்த நிலையில், இந்த அதிரடி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் முழுமையாக கண்காணித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புத்துறை அமைச்சர், அமைச்சரவை கூட்டம் என வரிசையான ஆலோசனைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வரும் நாள்களில் நார்வே, குரோஷியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலை கருத்தில் கொண்டு அவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் பதில் நகர்வுகள் என்ன என்பதை பிரதமர் மோடி கூர்ந்து கவனித்து வருகிறார். முன்னதாக, வரும் மே 9ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் அந்நாட்டில் 2ஆம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் பங்கேற்க பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பிரமுகர் இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.