பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவதா பேசியுள்ளளார்.

ஏற்கனவே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு பாஜகவை அவமானப்படுத்திய நிலையில், அம்மாநில துணை முதல்வர், இந்திய ராணுவம் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் வணங்குவதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜபல்பூரில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புத் தன்னார்வலர்களின் பயிற்சி விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய தேவதா, “பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். முழு நாடும், அதன் ராணுவமும், அதன் வீரர்களும் அவரது காலடியில் வணங்குகிறார்கள். “முழு நாடும் அவரது காலடியில் வணங்குகிறது,” என்று கூறினார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட பதிலடியைப் பாராட்ட வார்த்தைகள் போதாது என்று கூறிய தேவதா, ‘மோடிக்கு ஒரு பெரிய கைதட்டலை வழங்குவோம்’ என்றார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மிகவும் கோபமடைந்தனர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலையோ இந்திய ராணுவத்தின் நடவடிக்கையையோ அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியிருந்த அதேவேளையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கூறிவருவதை மோடியும் பாஜக தலைமையும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.