பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பதிலடி நடவடிக்கையில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் இதை விளக்கினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் மோடிக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆயுதப்படைகளின் இந்த நடவடிக்கை தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் இதன் காரணமாக ஆயுதப்படைகளைச் சேர்ந்த எந்த அதிகாரியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
இருப்பினும் பிரதமர் பங்கேற்காதது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ராணுவ நடவடிக்கை குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் விளக்கினார்.
அப்போது அவர், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆயுதப்படைகள் நடத்திய நடவடிக்கையில் ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.
தற்போது ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அது தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
எல்லையில் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ள அதேவேளையில் பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில், முழு நாடும் அரசாங்கத்துடனும் ஆயுதப்படைகளுடனும் ஒற்றுமையைக் காட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.