தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

காவிரி நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.  குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த  சில  நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லில்  விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த நாள் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நிலையில், நேற்று (ஆகஸ்டு 17ந்தேதி() காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்திருந்தது.   தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவீட்டின்போது இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடியாக  தண்ணீர்  வந்துகொண்டிருந்தது. பின்னர் இரவு 14ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது

இந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால்,  ஒகேனக்கல்லில்  3வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு, நேற்று காலை 3,260 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 9,394 கனஅடியாகவும் அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 53.15 அடியாகவும், நீர் இருப்பு 19.85 டிஎம்சியாகவும் இருந்தது.