சென்னை:
மிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பிற்குப் பின் மாணவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இரு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவதற்காக இட வசதிகள் உள்ளதா, காற்றோட்ட வசதி உள்ளதா என பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருவதால் மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன.

கொரோனா பரவலின் தாக்கம், அடுத்த கட்ட ஊரடங்கு ஆகியவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.