பனாஜி,
திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருமாறியுள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
கோவா தலைநகர் பனாஜியில் இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை உலகில் திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்கியுள்ளோம் என்று பெருமையுடன் கூறினார்.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் கவரும் நோக்குடன் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான எளிமையான சுற்றுசூழலை உறுதிப்படுத்திடவும் மற்றும் உருவாக்கவும் எண்ணற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது எனவும் கூறினார்.
இதன் முடிவாக உலகின் திறந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருமாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்தவும் மற்றும் பொதுவான சவால்களை தீர்ப்பதற்காகவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பிற்காக புதிய மேம்பாட்டு வங்கி (என்.டி.பி.) ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவா மாநிலத்தின் பனாஜி நகரில் பிரிக்ஸ் மாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மிச்செல் டெமெர், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று பிரிக்ஸ் நாட்டின் வர்த்தக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மோடி, நாட்டில் எளிமையான வர்த்தகத்திற்கு நாங்கள் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதன் முடிவுகள் தெளிவாக தெரிகின்றன.
உலகில் திறந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நாங்கள் உருமாற்றியுள்ளோம் என கூறினார்.
மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கான வங்கி பற்றி கூறும்பொழுது, என்.டி.பி.யின் வெற்றி நம்முடைய பொது வான முயற்சிகளின் உறுதியான முடிவாகும். அது தூய்மையான ஆற்றல் மற்றும் நிலையான கட்டமைப்பினை அதிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கொண்டுள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
நமது பொது இலக்கான வர்த்தக உறவினை வலிமைப்படுத்துவது மற்றும் முதலீட்டு பிணைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை அடைய பிரிக்ஸ் வர்த்தக கவுன்சிலை நாம் சார்ந்து இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா மற்றும் பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கே ஆகியோருடன் இருதரப்பு விவாதத்திற்கான கூட்டத்திலேயும் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.