நீலகிரி: கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க பெரும்பாலோர் ஊட்டி போன்ற கோடை வாபஸ்தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், ஊட்டியின் சிறப்பான மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதை காண சுற்றுலா பaணிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால், ஈ-பாஸ் வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைவிழாவையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் நாளை (மே 10ந்தேதி) தொடங்கும் நிலையில், 20-ந் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த கண்காட்சியை காண வரும் சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இநத் கண்காட்சியில், 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், வில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றை பூங்காவலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள், ரங்கோலி அமைக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டுன் பொம்மைகளும் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக கண்காட்சி தொடங்கும் நாளை மற்றும் நிறைவடையும் நாளான 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூங்காவில் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்குகிறது. 4200க்கும் மேற்பட்ட ரகங்களில் உள்ள 32 ஆயிரம் பல வண்ண ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இ-பாஸ் நடைமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் இ-பாஸ் வாங்க மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த இ-பாஸ் முறையால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளதால், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்குவதால் அதை காண சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து கூறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் கிடைத்திடும் வகையில் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களை இ-பாஸ் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி இ-பாஸ் பெற்று தரப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை கொண்டு மேற்காணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6-ந் தேதி முதல் நே 8-ந் தேதி மாலை வரை சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலாபயணிகள், 58 ஆயிரத்து 983 வாகன ங்களில் பயணம் செய்ய இ-பாஸ் முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர பதிவு செய்துள்ளனர். தாவரவியல் கண்காட்சியையொட்டி மேலும் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோமை.
இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தங்கும் விடுதிளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தாங்கள் வழங்கும் அறை முன்பதிவிற்கான ரசீதில் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதற்கிடையில், ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நாளை (10.05.2024) தொடங்கி 20-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.