கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோட்டயம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கொண்டு செல்லப்படும் அவரது உடலைக் காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த இறுதி ஊர்வலம் இரவு 10 மணி ஆகியும் சுமார் 90 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளது. இன்னும் சுமார் 60 கி.மீ. தூரம் உள்ளதை அடுத்து நள்ளிரவு அல்லது அதிகாலையில் தான் அவரது உடல் புதுப்பள்ளி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு முறை கேரள முதலமைச்சராக பதவி வகித்த உம்மன் சாண்டி தன்னை சந்திக்க வரும் மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் குறைகளுக்கு செவிமடுப்பவராக இருந்ததாலேயே கட்சி பாகுபாடின்றி வழிநெடுகிலும் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.
#MourningJourney of .@Oommen_Chandy
12 hours
72 kmMiles to go… pic.twitter.com/InWlwcwy9X
— Rejimon Kuttappan (@rejitweets) July 19, 2023
புதுப்பள்ளி-யில் நாளை பிற்பகல் உம்மன் சாண்டியின் உடல் அவரது விருப்பத்திற்கு இணங்க முன்னாள் முதலமைச்சருக்கு உரிய எந்தவித அரசு மரியாதையும் இல்லாமல் சாமானியனைப் போல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
முன்னதாக நேற்று பிற்பகல் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரது உடலைக் காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததை அடுத்து விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்ல 4 மணி நேரத்திற்கும் மேலானது.