மும்பை
வட இந்தியப் பண்டிகையான தன்தெராஸ் (தீபாவளி) தினத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களை தவிர்த்து உலோகங்களே வாங்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் தன்தெராஸ் என்னும் பண்டிகையும் தீபாவளித் திருநாளுடன் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தங்க நகைகள், உலோகப் பாத்திரங்கள ஆகியவற்றை வட இந்தியர்கள் வாங்குவது வழக்கம். சென்னையில் அக்ஷய திருதியை அன்று மக்கள் நகைக்கடைகளில் தற்காலத்தில் குவிவதைப் போல் பலமடங்கு அந்த நாளில் வட இந்தியாவில் நகைக்கடைகளிலும் பாத்திரக் கடைகளிலும் குவிவது வழக்கம்.
இந்த தன்தெராஸ் தினத்தை ஒட்டி பல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் தள்ளுபடி விலை அளிக்கப்பட்டுள்ளதாக விளம்பரங்கள் வருகின்றன. அத்துடன் இல்லாமல் பல வங்கிகளும் வட்டியில்லா தவணையில் இந்த எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க கடன் அளிக்க முன் வந்துள்ளது. ஆனால் இதை பல வட இந்திய மக்கள் எதிர்த்துள்ளனர்.
இது குறித்து ஒரு முதியவர், “தன் திராஸ் என பிரித்து பார்க்கையில் தன் என்பது செல்வத்தை குறிக்கும். அதனால் அங்கு தங்கம் போன்ற உலோகங்களை வாங்குவதால் செல்வம் அதிகரிக்கும். மேலும் அன்று வாங்கும் பொருட்களில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி குடி இருப்பாள் என்பது ஐதீகம், அதனால் மேலும் மேலும் அப்பொருட்கள் வீட்டில் நிறையும். தங்கம் நிறைந்தால் பலனுண்டு. ஒரே வீட்டில் பல வாஷிங் மெஷின் நிறைந்தால் என்ன பயன்” என நகைச்சுவையுடன் கூறி உள்ளார்.
மக்களில் பலரும் இந்த எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணமாக்க முயலுவதாக கூறி உள்ளனர். ”லட்சுமி தேவி பாதாளத்தில் வசிப்பதாக ஒரு ஐதீகம் இந்தி பேசும் மக்களிடையே உள்ளது. அதனால் அதே பாதாளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்படும், தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளையும், உலோகத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களிலும் தான் லட்சுமி குடி இருப்பாள். எக்காலத்திலும் லட்சுமி தேவி மைக்ரோ வேவ் அவன், வாஷிங் மெஷின், ரெஃப்ரெஜிரேட்டரில் குடி இருந்ததாக வரலாறு இல்லை” என ஒரு வட இந்தியப் பெண் தெரிவித்துள்ளார்.