பலியா:
இந்து கலாசாரத்தை ஏற்று கொள்ளும் இஸ்லாமியர்கள் மட்டுமே, இந்தியாவில் வாழ முடியும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், பைரியா தொகுதி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சுரேந்திர சிங். மகர சங்கராந்தியை முன்னிட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவர், தெரிவித்ததாவது:
“பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அவதார புருஷர் ஆவார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா, 2025ல் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக, 2024ல், இந்தியா, இந்து நாடாக ஆகிவிடும்.
பிரதமர் மோடி மற்றும் உ.பி., முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரின் சிறப்பான தலைமையாலும், கடவுளின் அருளாலும், சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக,உருவெடுக்கும். உலக நாடுகளுகளுக்கே குருவாக, இந்தியா விளங்கும்.
இந்தியா, இந்து நாடாக மாறிய பின், இந்து கலாசாரத்தை ஏற்று கொள்பவர்கள் மட்டுமே, இந்தியாவில் வாழ முடியும். இஸ்லாமியர்கள் பலருக்கு, இந்தியா மீது பற்று இல்லை. அவர்களும் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டால் இங்கு வாழலாம். இல்லாவிட்டால் வேறு நாட்டில் குடியேற வேண்டி வரும்” என்று பேசினார்.
அவரது பேச்சு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.