சென்னை:  ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய சந்தேகங்களுக்கு, தமிழக அரசு விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்பட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து கடந்த மாதம் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர். இந்த மசோதா ஆளுநரின் அனுமதிக்காக ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் அனுமதி வழங்காதது சர்ச்சையானது. இதையடுத்து, ஆளுநர் தரப்பில், பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தமிழகஅரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். குறிப்பாக, ஆன்லைன் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று ஆளுநர் வினவியிருந்தார்.

இந்த நிலையில்,  ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.