டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு சமீபத்தில் வக்ப் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில், அடுத்து “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என பிரதமர் மோடி பேசியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 78வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பேசும்போது, புதிய குற்றவியல் சட்டங்களில் தண்டனையைவிட நீதி கிடைப்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளோம் என்றவர், “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என கூறினார்.
மக்கள் “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தியவர், “தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது என்றும், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது என்று சுட்டிடக்காட்டியதுடன், எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது, இது தவிர்க்கப்பட வேண்டும், அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்” பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதுபோல, நாடு முழுவதும் “பொது சிவில் சட்டம் – அமல்படுத்தும் தருணம் என்றும், மதம் சார்ந்த சி வில் சட்டத்திலிருந்து மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி மாற வேண்டிய தருணம் இது” என்றும் நீதிதித்துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றவர், “நாட்டை வலிமையாக்க மாற்றங்களை கொண்டு வருகிறோம்” என்றார்.
“மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கானது” என்று கூறிய பிரதமர், 2047ல் வளர்ச்சி அடைய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
அனைவருக்கும் சேவை செய்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசின் பணியாக உள்ளது. இந்தியா 5ஜி சேவையை வேகமாக வழங்கி வருகின்றது. இதனுடன் நின்றுவிடாமல் 6ஜி சேவையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்”
“இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். இந்தியாவில் புதிதாக 75,000 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும். நமது நாட்டிலேயே சிறப்பான கல்வி வழங்கப்பட்டால் மாணவர்கள் வெளிநாடு செல்ல தேவையிருக்காது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தனியாரின் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்றார்.
ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா” திட்டம், “3ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம்”, “உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள்”, “வங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன” “இன்று அரசின் திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே செல்கிறது என்றவர், தனது ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார்.
விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம், விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்” தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு பெருமையான விஷயம் என்றவர், விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை மக்கள் வழங்கியுள்ளனர். திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை சிலர் வழங்கியுள்ளனர் இதன் வாயிலாக அதிகளவிலான செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது என்றும் கூறினார்.
நடப்பாண்டு ஏற்கனவே நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை. 2014 (282 இடங்கள்) மற்றும் 2019 (303 இடங்கள்) மக்களவைத் தேர்தல் போலல்லாமல், இந்த முறை கூட்டணி ஆட்சியே அமைத்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பா.ஜ.க வலுவாக எழுப்பிய விஷயங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இப்போது என்ன ஆகும்? என விவாதங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்றைய பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவது, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவை இதில் முக்கியமானவை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுூத்தியது.
இந்த விஷயங்கள் தொடர்பாக பாஜக தனது கூட்டணி கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியுமா? இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்ல தேவையான பெரும்பான்மையை பா.ஜ.கவால் திரட்ட முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
“சமீபத்திய சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாமலும் போகலாம். இப்போது கூட்டணிக்கு (என்.டி.ஏ) பெரும்பான்மை இருப்பதால் சில சட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால் நிரந்தர மாற்றங்களைச் செய்வது, குறிப்பாக அரசியலமைப்பு திருத்தங்கள் என்று வரும் போது அவை மிகவும் சவாலானதாக இருக்கும்,” என்று மக்களவை முன்னாள் தலைமைச் செயலாளர் பிடி ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.