சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 198 எம்பிக்கள் வாக்களித்தனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில்,  இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.  இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அரசு அதிகாரிகளின் விளக்கம் அளிக்கப்படும்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை  2024 டிசம்ப;ர  மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக,  இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையில், இந்த மசோதா சட்டமானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தது. மேலும், இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியது.

இந்த திருத்தங்களை மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஏற்றது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் டிசம்பர் 17 ஆம் தேதி பிற்பகல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மசேதா  ஆரம்ப சுற்று விவாதம் நடத்தப்பட்டது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.” என்று கூறினார்.

“ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.” என கூறி மசோதாவுக்கு  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி,  எதிர்ப்பு தெரிவித்தார். திமுக தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி டி.ஆர். பாலு, “மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். மசோதாவை கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். “பிரதமரும் இதை விரும்பியதால் அதை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) நாம் அனுப்பலாம். இந்த மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும் என்று திமுகவின் டி.ஆர்.பாலு கூறினார்.

இதை ஜே.பி.சி.க்கு அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என்று பிரதமரே கூறியிருக்கிறார்.” என்று மக்களவையில் அமித் ஷா கூறினார்.

அரசியல் சாசன திருத்தம் கோரும் இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கேட்டுக் கொண்டன. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்று, வாக்கெடுப்பு நடத்தினார். இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும் எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

கடந்த மாதம் 17ம் தேதி தாக்கலான மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து 39 உறுப்பினர்கள் கொண்ட  நாடாளுமன்ற  கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்த கூட்டுக்குழு இன்று  (ஜனவரி 8ந்தேதி)  கூடுகிறது. இந்த கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 39 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக பாஜ எம்.பி பிபி சவுத்ரி உள்ளார். கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், குழு உறுப்பினர்களுக்கு முன்மொழியப்பட்ட மசோதாவின் விதிகள் குறித்து விளக்குவார்கள்.

இந்த கூட்டத்தில், ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா  குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு  அரசு அதிகாரிகள் பதில் அளிக்க உள்ளனர். இதையடுத்து மசோதா குறித்து கூட்டுக்குழு முடிவு எடுக்கும்.