டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா வரும் 16ஆம் தேதி (திங்கட்கிழமை)  மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும், அதை மீறி வரும் 16ந்தேதி  திங்கட்கிழமை மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செலவினங்களை குறைக்கும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றி, இந்த  திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனை மீறியும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு, பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டு 18 ஆயிரத்து 626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.

இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவைத் தாக்கல் செய்கிறார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரேநாடு ஒரே தேர்தல் முறையில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த 1951-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை 5 தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒன்றாக நடத்தப்பட்டுள்ளன. 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வெவ்வேறு மாதங்களில் சட்டப்பேரவை, மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 1984, 89, 91, 96-ம் ஆண்டுகளில் இணைத்து நடத்தப்பட்டுள்ளன.

1998-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மக்களவைக்கு 1998, 99, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் தேர்தல் நடந்துள்ளது. சட்டப்பேரவைக்கு 2001, 2006, 2011, 2016, 2021 என மாறுபட்ட ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கான இடைவெளி என்பது 3 ஆண்டுகளாக உள்ளது. இதனால், ஒரேநாடு;ஒரே தேர்தல் முறை அமலுக்கு வரும்பட்சத்தில் அதில் அரசியல்ரீதியான சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்த திட்டம்  அமல்படுத்தப்படும் நிலையில்,  தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் இரண்டு மடங்காக தேவைப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை அமலானால் 5 லட்சத்துக்கும் அதிகமான இயந்திரங்கள் தேவைப்படும். அதை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

அதே வேளையிங்ல,  ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு தேர்தலுக்கான இயந்திரங்களும் வைக்கப்படுவதால், வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் அதே அளவில்தான் பயன்படுத்தப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதுபோல தேர்தல் பிரசாரங்களுக்கு செலவிடப்படும் தொகையும் பாதியாக குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் பலநூறு கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.